சிங்கம்பிடாரி கிராமத்தில் சிங்கம்போல வாழ்ந்து ஊர் மக்கள் மத்தியில் ரவுடி ரத்தினம் என்ற பெயரை பெற்றவர் கிஷோர். இவர்தான் கதாநாயகன் அறிவுநிதியின் அப்பா ( எப்பாடு பட்டாலும் பிற்பாடு கொடாதவர் வம்சத்தை சேர்ந்தவர்). குதிரை பந்தயம், மாட்டுவண்டி பந்தயம், சிலம்பம் என்று எதுவாக இருந்தாலும், அதில் வெற்றி கனியை பறிப்பவர். ஊரில் அவரை மிஞ்ச ஆள் இல்லை என்று இருக்க. அவருடைய வெற்றியை விரும்பாத நஞ்சுண்டா மா.ஓ.சி. வம்சத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ், கிஷோருக்கு சாரயத்தில் விஷத்தை கலந்து கொடுத்து அவரை கொன்று விடுகிறார்.
பழிவாங்குதல் தவறு, மறப்பதும், மன்னிப்பதும்தான் மனித குணம் என்று வாழும் கிஷோரின் மனைவி அனுபம் குமார், தன் மகனை ரவுடியிசத்தில் ஈடுபடாத, ஊர்மக்கள் நேசிக்கும் நல்ல பிள்ளையாக வளர்க்கிறார். ஆனால், அப்பா செய்த பாவம் பிள்ளை பின்தொடரும் என்பது போல அருள்நிதியை அவரது அப்பாவின் எதிரிகள் அவரை கொள்ள துரத்துகின்றனர். அதற்கு எல்லாம் அமைதியான முறையில் தீர்வு காண்கிறார்.
அருள்நிதிக்ககும், புலிவதனம் கிராமத்தை சேர்ந்த சுனைனாவுக்கும் காதல் மலர்கிறது. இந்த நிலையில் பகையின் காரணமாக சுனைனாவின் தந்தையை ஜெயபிரகாஷ் போட்டு தள்ள, அதனால் காதலியின் தந்தையை கொன்றதற்காகவும், தனது தந்தையை கொன்றதற்காகாவும் ஜெயபிரகாஷை எதிர்க்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறார் அருள்நிதி.
ஆரம்பத்தில் அமைதியான வழியில் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள நினைத்தவர், பிறகு அடிதடியின் மூலம் பிரச்சனையை எதிரிகளே கொண்டு வந்து நிறுத்தியதால், அதை சவாலாக எடுத்துக்கொண்டு எப்படி வெற்றி பெற்று தனது வம்சத்தை தழைக்க வைக்கிறார் என்பது மீதி படம்.
மறவர் இன மக்களிடையே நடப்பது போன்ற ஒரு கதையை அந்த யதார்த்தத்தோடு படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இதில் பாசம், கோபம், பழிவாங்கும் குணம், கோவில் திருவிழா, காதல் போன்ற விஷயங்கள் படம் முழுக்க பரவியிருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு பரபரப்பான படமாகவே படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். வழக்கமான மசாலா படமாக இல்லமல் ஒரு கிராமத்து சம்பவம் போல காட்சிகளை படமாக்கி இருக்கிறார்.
முதல்வரின் பேரனும், மு.க.தமிழரசு மகனுமான அருள்நிதி, இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். அம்மாவின் அன்புக்கு கட்டுப்பட்டு நடக்கும் பொறுப்பான பிள்ளையாக வாழ்ந்திருக்கிறார். ஆரம்ப காட்சியிலேயே அவரது கையை வெட்ட வரும் ரவுடிகளை, தண்ணீரில் வைத்து தண்ணி காட்டும் போது கை தட்டல்களை அள்ளுகிறார்.
டூ வீலரில் வரும் போது வழியில் சந்தையில் விற்ற பசுவை பார்த்தும், அதனிடம் கொஞ்சி பேச, அதன் உரிமையாளரான சுனைனாவிடம் அறிமுகமாகி, தினம் தினம் மாடு வீட்டுக்கு வந்துட்டு என்று பிடித்துக்கொண்டு போய் நின்று அவரை காதலிக்க வைப்பது செம ரொமான்ஸ் பார்ட்டியாக நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.
காதலிக்கு ஒரு துன்பம் வந்த போது, அவளுக்கு உதவியாக இருந்து, தன்னை அடிக்கும் போது கூட வாங்கிக்கொண்டு, அவளை தாக்கும் போது வெகுண்டெழுந்து அடிக்கிற காட்சியில் எனக்கு இப்படியும் புரட்ட தெரியும் என்று ஆக்ஷன் திறமையை நிருபிக்கிறார். அதே போல கிளைமாக்ஸ் காட்சியில் மோதுகிற காட்சியில் தூள் பரத்தியிருக்கிறார்.
என்னோட பொறுமையை பயம்னு நினைத்துக்கொள்வாங்க என்று அம்மாவிடம் தன்னுடைய மனஅழுத்தத்தை வெளியிடும் காட்சிகளிலும் பளிச்சிடுகிறார். அவருடைய சிரித்த முகம் மனதில் எளிதில் பதிந்து விடுகிறது. அவருடைய உயரம் ஆக்ஷனை ஏற்றுக்கொள்ளச் செய்து விடுகிறது.
சுனைனா பாவாடை, தாவணி கட்டிக்கொண்டு மலர் கதாபாத்திரத்தில், அவர் கிராமத்து பெண்ணாகியிருக்கிறார். அவருடைய முகத்தில் பாசம், பயம், கோபம் என எல்லாம் எளிதில் ஒட்டிக்கொள்கிறது. அவர் வருகின்ற காட்சிகளில் எல்லாம் ஸ்கோர் செய்துவிடுகிறார். “நான் கொட்டமுக்கி வம்சம், அப்படின்னா என்னான்னு தெரியுமா? அடுத்தவங்க கொட்டத்தை அடக்குற வம்சம்டானு” அவரும் தன் பங்குக்கு படத்திற்கு பலம் ஏற்றியிருக்கிறார். பரபரன்னு ஒரு கோபத்தோடு ஒருவரை அடித்துவிட்டு தன்னை பார்க்க வந்த அருள்நிதியிடமும், அவங்க அம்மாவிடமும் சகஜமாக பேசும்போது அடேங்கப்பா போட வைக்கிறார்.
ஜெயப்பிரகாஷ் நல்ல வில்லன் என்று சொல்ல வைத்துவிடுகிறார். எத்தனை முறை அவமானப் பட்டாலும், பொறுமை காத்து, அன்பாக பேசி, கழுத்தை அறுக்கும் அவர் கதாபாத்திரத்திற்கு அவருடைய பர்பாமென்ஸ் அசத்தல்.
தயாக வரும் அனுபம்குமார், தன்பிள்ளையும், சமூகத்தையும் நல்வழி நடத்த வேண்டும் என்று தன்னுடைய கதாபாத்திரத்தை நிறைவு செய்திருக்கிறார். அவருடைய முதுமையை காட்ட கண்ணில் ஒரு கண்ணாடி மட்டுமே போதும் என்று முடிவு செய்தது ஏனோ.
கதையின் பின்னணியாக அமைந்த கிஷோர் தன்னுடைய கதபாத்திரத்தின் பலம் உணர்ந்து பிரதிபலித்திருக்கிறார். குடும்ப கட்டுபாட்டு ஏஜென்டாக வரும் கஞ்சாகறுப்பு கதாபாத்திரம், சில இடங்களில் சிரிக்க வைக்கிறது..
நாட்டில் உள்ள திறமை சாலிகளை அழைத்து வந்து, கலக்கப்போவது யாரு, அசத்த போவது யாரு என்று சேனல்களில் அவர்களின் திறமையை நிருபிக்க வைத்த ராஜ்குமார், இதில் சீனித்தேவர் மகனாக சீரியசான பாத்திரத்தில் நடித்து, கிளைமாக்ஸ் காட்சியில் அடித்து உருண்டு யதார்த்தமாக நடித்து தனது திறமையை நிருபித்திருக்கிறார்.
படம் முழுக்க பல காட்சிகளில் கூட்டம். எல்லோரும் கிராமத்து யதார்த்த முகங்கள்.
மகேஷ் முத்துச்சாமியின் ஒளிப்பதிவும், யோகபாஸ்கரின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம். தாஜ்நூரின் இசையமைப்பில் திருவிழா களை கட்டுகிறது. என்னஞ்சே… பாடல் இதமான வருடல் என்றால், மன்னாதி மன்னரு பாடல் உணர்ச்சிமிக்க ரகம்.
இயக்குனருக்கு ரொம்ப துணிச்சல்தான் நேரடியாக ஒரு ஜாதியின் பெயரை சொல்லி, அவர்களுள் நடக்கும் பழிவாங்கும் மோதலையும் சொல்லி மன்னிப்பதுதான் மனிதகுணம் என்ற அழுத்தமான கருத்தையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.அதே சமயம் யாரையும் புன்படுத்தாமல் கோவில் திருவிழா மன்டகப்படி வகையறா பழிவாங்கும் போக்கு என்று எல்லா காட்சிகளுமே எதாத்தமாக பதிவு செய்திருப்பது அவரது திறமையை காட்டியிருக்கிறது.
பசங்களை வைத்து பசங்க மாதிரியான படத்தையும், இளைஞர்களை வைத்து நல்ல ரசனையான கிராமத்து சம்பவங்களையும் கொடுக்க முடியும் என்பதை நிருபித்திருக்கிறார். இன்னும் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தியிருந்தால் வம்சம் பெரிய வெற்றியை தேடித்தந்திருக்கும். .
- எஸ்.செல்வநாதன