‘தேவதையை கண்டேன்’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’ ‘மலைக்கோட்டை’ போன்ற படங்களை தந்த இயக்குனர் பூபதிபாண்டியன், அடுத்து காமெடி, காதல், ரொமான்ஸ் என்று தனது பார்முலாவில் சொல்ல வந்திருக்கும் படம் ‘காதல் சொல்ல வந்தேன்’.
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவன், மூன்றாம் ஆண்டு மாணவியை காதலிக்கும் கதை.
பள்ளி படிப்பை முடித்து, முதலாம் ஆண்டு கால்லூரிக்கு வரும் பாலாஜி, வந்த முதல் நாளே மேக்னா சுந்தரின் அழகில் அடித்து போடப்படுகிறார். அவரை எப்படியாவது காதலிப்பது என்று அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார்.
அவரை காதலிக்கும் இளைஞர்களுக்கு உதவுவதாக கூறி அவருக்கு அல்வா கொடுத்துவிட்டு இவரே களத்தில் இறங்கி தனது நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொள்கிறார். எவ்வளவுதான் விழுந்து விழுந்து பழகினாலும் அக்கா என்று சொல்ல வைக்கிறார் நாயகி. இருந்தாலும் அவரை காதலிக்க வைப்பதே நோக்க மாக அலைகிறார்.
ஒரு கட்டத்தில் நேரிடையாக காதலை சொல்ல அதனால் மனம் உடைந்து போகும் நாயகி சொந்த ஊரான காரைக்குடிக்கு திரும்பிவிடுகிறார். அவரை தேடி போய் சந்தித்து அழைத்து வந்து மறுபடியும் தன் காதலை அழுத்தமாக சொல்கிறார். தன் மீது காதலோடு திரியும் அவனை திருத்த முடியாமல் போராடும் மேக்னா சுந்தர், ஒரு கட்டத்தில் கல்லூரிக்கு செல்லாமல் ஹாஸ்டல் அறையிலேயே அடைந்து கிடக்கிறார்.
அவரை தேடி சுவர் ஏறி குதித்து வந்து பார்க்கும் அவனிடம் தனது நிலையை எடுத்து கூறும் போது, அவனது பெற்றோர் பார்த்துவிட, அவனை அந்த கல்லூரியில் இருந்து டிசி வாங்கி அழைத்து செல்கின்றனர்.
தன்னை காதலிப்பதை மறைக்கிறாள் என்று உணரும் அவன், அவள் காதலை சொல்ல ஒரு திட்டம் போடுகிறார். அந்த திட்டத்தில் அவள் காதலை சொல்வாள் என்று எதிர்பார்க்கிறார். அவன் நினைத்தது போலவே அவளும் காதலை சொல்ல வருகிறாள். அனால் அவன்தான் இல்லாமல் போகிறான். அது எப்படி என்பது எதிர்பாரத கிளைமாக்ஸ்.
கலகலப்பான கதையை சொல்லும் இயக்குநர் கதாநாயகி அவனை ஏன் அரம்பத்தில் ஏற்க மறுக்கிறாள் என்கிற அழுத்தமான காரணத்தை சொல்ல வில்லை.
கதாநாயகன் பாலாஜி நல்ல நாயகனாக வலம் வர தகுதியுடையவர் என்பதை, அவர் தனக்கான ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்து காட்டியிருக்கிறார். தூரத்தில் இருந்து தான் காதலிக்கும் பெண்னை ரசித்து பார்ப்பது. அருகில் அமர்ந்து இருக்கும் போது கண்களில் ரியாக்ஷன் கொடுத்து சந்தோஷத்தை காட்டுவது என அசத்தியிருக்கிறார்.
கதாநாயகிக்கு நல்ல வேலை உள்ள திரைக்கதை அதற்கு சரியான ஆள்தான் இந்த மேக்னா சுந்தர். நட்போடு பழகும் எதார்த்தம், தன்னை விட சிறியவன் தன்னை காதலிக்கிறான் என்று கோபப்பட்டாலும், அவனுடைய வாழ்க்கை தன்னால் கெட்டு போய்விடுமோ என்று பீல் பண்ணும் இடங்களிலும் அவர் மனத்தின் பரிதவிப்பை முகத்தில் பிரதிபலிக்கும் போது மனதில் பதிகிறார்.
சபேஷ் கார்த்தியின் நகைச்சுவை சேட்டையில் தியேட்டர் சிரிப்பலையில் அதிர்கிறது. நிச்சயம் இவர் ஜெயித்திருவார். அந்த சிங் கேரக்டர், அவரது நண்பராக வரும் அந்த ஹேப்பிராஜ் காமெடி ரசனையான செம கலாட்டா. ஹீரா, லீனா, ஆர்.சுந்தர்ராஜன், தம்பிராமையா, எலிஸபெத், தாஜ்கான், செவ்வாளை, டைகர் தங்கதுரை என திரையில் தோன்றும் அத்தனை பேரும் மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள்தான்.
படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் ஒளிப்பதிவாளர் ராணாவின் திறமை பளிச்சிடுகிறது. யுவன் சங்கர்ராஜா இசையில் பாடலாசிரியர் சாரதி எழுதிய ஓ ஷலா பாடலும், பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய அன்புள்ள சந்தியா பாடலும் ரிங்டோனுக்கு போட்டி போடும் பாடல். பிரவீன் – ஸ்ரீகாந்த்தின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம்.
படம் ஆரம்பம் முதல் ரொமான்ஸ் மற்றும் காமெடியால் ரசிகர்களை கட்டி போட்டிருக்கும் இயக்குனர், இறுதியில் மனதை கனக்க வைத்து விடுகிறார். முதல் பாதியில் இருந்த வேகமும் விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் இன்னும் கூட்டியிருக்கலாம்.
- எஸ்.செல்வநாதன்
