பள்ளி படிப்பை முடித்துவிட்டு, கல்லூரிக்குள் முதல் நாள் நுழையும் முதலாமாண்டு மாணவ, மாணவிகள் சீனியர்களின் ராக்கிங் செயலால் ஒன்று சேர்கின்றனர். அதில நான்கு ஜோடி ஆரம்பத்தில் நட்பும் பிறகு உள்ளுக்குள் காதலையும், ஈகோவையும் வைத்துக்கொண்டு போராடுவதுதான் முழு படமும். அவர்கள் காதலை சொல்லும் போது கிளைமாக்ஸ் வந்துவிடுகிறது.
வெட்டு, குத்து, அருவா, துப்பாக்கி என்று படங்களை பார்த்து அழுத்து போகும் ரசிகர்களுக்கு ஆறுதலான சந்தோஷமான படம் இது. படம் முழுக்க இளசுகளின் பேச்சும் விளையாட்டும், காதலும் ஏக்கமும் தவிப்பும் நிறைந்திருக்கிறது. காதலிக்காதவர்கள் சென்றால் காதல் பூக்கலாம். காதலித்து ஈகோவில் இருப்பவர்கள் சென்றால், அதை விளக்கி ஒற்றுமையோடு வருவார்கள். உண்மையாக அன்பு செலுத்தி வாழ்ந்த கணவன் மனைவி பிரிந்து இருந்தால், இந்தப் படத்தை பார்த்த பிறகு தங்களது பிடிவாதங்களை விட்டு விலகி ஒன்னு சேர்வார்கள். அப்படி ஒரு கலகலப்பான இளமையான படம்.
ஆதித், நாராயண், விமல், ஷரன், ரேஷ்மி, சோனியா, பெனாஸ், ஜீயா உமர் எனும் எட்டு புதுமுகங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம். ஒருவர் அப்பா, அம்மாவை நேசிப்பவர் அவர்களுக்கு வாழ நினைப்பவர். ஒருவர் கல்லூரி காலத்தை ஜாலியாக கழிக்க நினைப்பவர். நண்பர்களுக்காக எதையும் விட்டுகொடுக்க நினைக்கும் புத்திசாலி, இப்படி கதாபாத்திரங்களில் எல்லோருமே வாழ்ந்து காட்டியிருக்கின்றனர். எல்லோரையும் ஒட்டுமொத்தமாக பாராட்ட வேண்டும்.
மிக்கி ஜே மேயர் இசையில் வைரமுத்து, நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளனர். அனைத்தும் அருமை. ஒளிப்பதிவாளர் கே.வி.குகன் படத்தை இயக்கி இருக்கிறார்.ஒவ்வொரு பிரேமும் கண்களில் ஒத்திக்கொள்வது இருக்கிறது. காட்சிகளையும் ரசிக்கும் படியும் அனுபவிக்கும் படியும் படமாக்கி இருக்கிறார். எல்லோருக்குமே பிளாஷ்பேக் நினைவுகள் தாலாட்டாகவே இருக்கும். அதே போல தியேட்டரில் ரசிப்பவர்கள் அதை அனுபவிப்பதை பார்க்கும் போது ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது. நீளத்தை குறைத்து வேகத்தை கூட்டியிருந்தால் இன்னும் இனித்திருக்கும்.
ஒரு பக்கம் கொண்டாட்டமாக இருந்தாலும், கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் இதைத்தான் செய்கிறார்களா என்கிற கேள்வியையும் மனம் கேட்கச் செய்கிறது?
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஹேப்பிடேஸ் படத்தை தமிழ் இனிது இனிது என்கிற பெயரில் ரீமேக் செய்திருக்கிறது பிரகாஷ்ராஜின் டூயட் மூவீஸ்.
இனிது இனிது – அனுபவிக்கலாம்… கொண்டாடலாம்