
சென்னை மாநகரத்துக்கு பல முகங்கள் உண்டு, அதில் நாள் தோறும் செய்தாள்களில் நாம் படிக்கும் கொலைகள் சம்பந்தமான செய்தியும் இருக்கும். அதிலும் ஒருவரை கொன்றுவிட்டு அவரது உடல்களை துண்டு, துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிவிட்டு போலீசுக்கு தலைவலியாக மாறியவர்களை பற்றியும் செய்திதாள்களில் படித்திருக்கிறோம் என்பது மறுப்பதற்கு இல்லை. அந்த செய்தி துண்டை வேறொரு பாணியில திரைக்கதையாக்கி அதற்கு நான் மகான் அல்ல என்ற பெயரை சூட்டியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.
ஒரு அழகான மிடில் கிளாஸ் குடும்பத்து பையன் கார்த்தி. அவர் மீது உயிரையே வைத்திருக்கும் அப்பா, அம்மா, தங்கை. இதுதான் அந்த குடும்பம். கார்த்தி பி.இ. படித்துவிட்டு வேலைக்கு அப்ளிகேஷன் போட்டுவிட்டு ஊரைச்சுற்றி கொண்டிருப்பவர். தனது தோழியின் திருமணத்தில் எததேச்சையாக காஜல் அகர்வாலை பார்க்க, அவரது அழகில் அடித்து போடுகிறார்.
காஜலை காதலித்து, அவரையும் காதலிக்க வைக்கிறார். இதனிடையே அவரது தங்கை திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. தங்கையின் திருமண பத்திரிகை அச்சடித்து திரும்பும் போது அவரது தந்தை கொலை செய்யப்படுகிறார். இதைப்பார்த்து அதிர்ந்து போகிறார் கார்த்தி.
தந்தையை கொலை செய்தவனை தேடி போகும் போது அது ஒரு கேங்க் என்று தெரிய வருகிறது. அந்த கூட்டத்தை ஒட்டுமொத்தமாக எப்படி அழிக்கிறார் என்பது கிளைமாக்ஸ்
முதல் பாதி காமெடி, ரொமான்டிக் என ஜாலியாக செல்லும் படம் இரண்டாம் பாதியில் சேசிங், ஆக்ஷன் என அதிரடி சக்கரம் கட்டிக்கொள்கிறது.
கார்த்தி முதல் பாதியில் நையான்டி, நக்கல், எகத்தாளம் என்று எதார்த்தமான இளைஞனாக வலம் வருகிறார். சில இடங்களில் பார்த்திபன் பேசுவது போல இருக்கிறது. பிற்பாதியில் சீரியஸாக யோசித்து பேசும் இளைஞனாகியிருக்கிறார். தனக்கு ஆக்ஷன் களத்தை பையாவில் ஆரம்பித்து கொண்ட கார்த்தி, இந்த படத்தில் மேலும் வளர்த்திருக்கிறார். பாடலில் நன்றாக ஆடி ரசிக்க வைக்கிறார்.
காஜல் அகர்வால் முதல் பாதியில் சில காட்சிகளிலும், பாடல்களிலும் வந்து போகிறார். பிற்பாதியில் படம் போற போக்கில் கானாமல் போகிறார்.
ஜெயப்பிரகாஷ் இவருடைய நடிப்பை பற்றி பேசாதவர்கள் இருக்க முடியாது. அவருக்கு படத்தில் இன்னும் வேலைகொடுத்திருந்தால் இன்னும் சில காட்சிகள் பலப்பட்டிருக்கும் என்பது மிகையாகாது. “அவன் என்னோட ஜெராக்ஸ்” என்று காஜல் அகர்வாலிடம் சொல்லும் இடத்திலும், தன்னுடைய சட்டையை தன்மகன் எடுத்து போட்டுக் கொண்டு போவதை அவர் பார்க்கும் காட்சியிலும் அசத்தியிருக்கிறார் மனுஷன்.
நண்பன் ரவியாக வரும் சூரி படத்தில் பளிச்சிடுகிறார். முதல் பாதியில் இவருடைய பங்கு படத்திற்கு பலம் என்று சொன்னாலும் மிகையாகாது. வெறும் சிரிப்பை மட்டும் தராமல், கதையிலும் ஈடுபாட்டோட நடித்திருக்கிறார். மேனஜராக வரும் பாலகிருஷ்ணன் பலே. கிருஷ்ணபிரியா, நீலிமா, ராஜீவன், தாஸ்னு இன்னும் சிலரும் படத்தில் இருக்கின்றனர். அந்த கில்லாடி நாலு பசங்களை எங்குதான் பிடித்தார்களோ. அந்த பாத்திரங்களுக்கு வலிமை சேர்த்திருக்கின்றனர்.
யுவன்சங்கர்ராஜா இசையில் மனதில் நிற்கும் பாடல்கள். பின்னணி இசையிலும் பலே. ஒளிப்பதிவாளர் மதியின் ஒளிப்பதிவு எதார்த்தோடு அமைந்திருப்பது சிறப்பு.
சமுதாயத்தின் அவலங்களை அக்கறையோடு எடுத்துக்காட்ட எடுத்திருக்கும் முயற்சியில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். அதே சமயம் இரண்டாம் பாதி முழுக்க கிளைமாக்ஸ் மாதிரி ஆனதால் பெரிய எதிர்பார்ப்பு குறைந்து போகிறது. சுசீந்திரனின் சமுதாய பார்வையையும், அக்கறையையும் மட்டும் கவனத்தில் கொண்டு. இது படைப்பாளியின் பார்வை என்ற கோணத்தில் மட்டும் படம் பார்க்க வேண்டிய படம்.
நான் மகான் அல்ல – கார சாரமான கமர்ஷியல் மசாலா.
