
கன்னடத்தில் இயக்கிய ‘சந்தோசா’ படத்துக்காக, சிறந்த கதை மற்றும் வசனத்துக்கு கர்நாடக அரசு விருது பெற்றவர், இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். பிறகு ‘சயனைடு’ படத்தை இயக்கினார். அதற்கும் சிறந்த படம், இயக்குனர், நடிகை, குணச்சித்திர நடிகருக்கான கர்நாடக அரசு விருது கிடைத்தது. தமிழில் ‘குப்பி’ பெயரில் வந்த அப்படம், ரமேஷுக்கு சிறந்த படைப்பாளி என்ற அங்கீகாரத்தை கொடுத்தது. அடுத்து ‘போலீஸ் குவார்ட்டர்ஸ்’ படத்தை கன்னடத்தில் இயக்கினார். இப்போது ‘காதலர் குடியிருப்பு’ மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார்.
என்ன கதை?
கதையல்ல, சில உண்மை சம்பவங்களின் தொகுப்புதான் ‘காதலர் குடியிருப்பு’. பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், காணாமல் போன தமிழ் இளைஞனைப் பற்றிய நிஜம். இதில் இழையோடும் காதல், அவன் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பது கிளைமாக்ஸ். ஒரிஜினல் சம்பவங்கள் நடந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தினேன். அது ஷூட்டிங் என்பதை மறந்து, காட்சிகளுடன் ஒன்றிய பொதுமக்களுக்கும் அழுகை வந்தது என்றால், நிஜ சம்பவங்களின் வீரியம் எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்.
‘காவலர் குடியிருப்பு’ மாற்றம் ஏன்?
படத்தை பார்த்தவர்கள், ‘அருமையான காதல் கதை. உயிரோட்டமான கேரக்டர்கள். டைட்டிலை பார்த்ததும் போலீஸ் கதை போல் தோன்றுவதால், ‘காதலர் குடியிருப்பு’ என மாற்றுங்கள்’ என்றனர். இந்த கருத்து ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்ததால், மாற்றி விட்டேன். துவாரகநாத்தின் ஒளிப்பதிவு, ஜேம்ஸ் வசந்தனின் இசை, நா.முத்துக்குமார் மற்றும் யுகபாரதியின் பாடல்கள் படத்துக்கு பெரிய பலமாக இருக்கும். இப்படத்தை மீடியா ஒன் சார்பில், டாக்டர் முரளி மனோகர் அடுத்த மாதம் வெளியிடுகிறார். வசிஷ்டா பிக்சர்ஸ் சார்பில் நான் தயாரித்து, எழுதி, இயக்கியுள்ளேன்.
உண்மை சம்பவங்களையே படமாக்குவது ஏன்?
கற்பனை கதைகளை விட, நிஜ சம்பவங்களில் யதார்த்தம் இருக்கும். கேட்பதற்கும், பார்ப்பதற்கும் த்ரில் இருக்கும். எதிர்பாராமல் நிகழும் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கலாம், பேசலாம், அவர்களின் அனுபவங்கள் மூலம் பல ஆலோசனைகள் பெறலாம். பொதுவாகவே ஆராய்ச்சி செய்வது எனக்கு பிடித்த விஷயம். ‘குப்பி’, ‘காதலர் குடியிருப்பு’ என உண்மை சம்பவங்களை இயக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள் வித்தியாசமானது.
மிரட்டல்கள் வருமே…?
நிறைய வரும். சில சம்பவங்கள் படமாகும்போது, அதில் சம்பந்தப்பட்டவர்களும் இருப்பார்கள். அவர்கள் வேறுமாதிரி விஷயத்தை புரிந்துகொண்டு கோபப்படுவார்கள். ‘வேண்டாம், விட்டு விடு என்பார்கள்’. வம்பு வளர்ப்பது எனக்கு பிடிக்காது. உள்ளதை உள்ளபடி படமாக்கும்போது, யாருக்கும் பயப்பட தேவையில்லை.
அடுத்து வீரப்பன் கதையா?
ஆமாம். சந்தனக்கடத்தல் வீரப்பன் கதையை, ‘வீரப்பன்’ பெயரிலேயே இயக்குகிறேன். எனது அக்ஷயா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இதற்காக 2001&ல் இருந்து நடந்த சம்பவங்களை ஆராய்ந்து வருகிறேன். மைசூர் ஜெயிலில் இருக்கும் வீரப்பன் கூட்டாளி துப்பாக்கி சித்தாவை சமீபத்தில் சந்தித்து, நிறைய தகவல்களை பதிவு செய்துள்ளேன். வீரப்பன் வாழ்ந்து மறைந்த பகுதிகளில், டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறேன். இதையறிந்த வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, இரண்டு முறை வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். நிஜங்களை சொல்ல முற்படும்போது, இதுபோன்ற சம்பவம் நடப்பது இயல்பான ஒன்று.