
அவமானங்களை அஸ்திவாரமாக நினைத்து போராடினேன். – இயக்குநர் கெளதமன்!
அதிர்வு திரைப்பட்டறை சார்பில் த.மணிவண்ணன் தயாரித்துள்ள படம் ‘மகிழ்ச்சி’. இந்த படத்தை வ.கெளதமன் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி முதன் முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்திறகு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியிட்டு விழா இன்று மாலை 4.00 மணிக்கு சென்னையில் உள்ள ஏவி.எம்.ஸ்டுடியோவில் நடைபெற்றது.
இந்த விழாவில், ‘மகிழ்ச்சி’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் திரையிடப்பட்டது. படத்தை பற்றி நடிகர்கள் கமல், சத்யராஜ் அளித்த சிறப்பு பேட்டி வீடியோவும் ஒளிபரப்பானது. பிறகு, இயக்குநர் வ.கெளதமன் படம் பற்றி பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
“இந்தப் படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம் பெறுகிறது. அதில் இரண்டு பாடல்களை கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதி உள்ளார். திருமண விழா பற்றிய ஒரு பாடல், “சேலை கட்டிய..” எனத் தொடங்கும் அந்த பாடலில் அக்கா தம்பி பற்றி பாசத்தை பதிவுசெய்திருந்தார். அதே போல “ஊத்து தண்ணி ஆத்தோட…” பாடலையும் படைதிருக்கிறார்.
கவிஞர் அறிவுமதி, நீண்ட நாட்களுக்கு பிறகு பாடல் எழுதியிருக்கிறார். கரு பழனியப்பன் படத்திறகு திரும்ப பாடல் எழுதி இருக்கிறார். அவரிடம் இந்தப் படத்திற்கும் “உச்சு கொட்ட இச்சு வச்சு…” என்கிற ஒரு பாடலை எழுதி வாங்கினோம். நந்தனம் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருக்கும் பச்சியப்பன், “கண்ணே கனியுறங்கு…”, “கூரப்பட்டு சேலைக்காரி…” என இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறார். இவர் எற்கனவே என்னுடைய சந்தனகாடு தொடருக்கு “வேலாயி… வேலாயி…” என்ற முகப்பு பாடலை எழுதியவர். அதே போல திருத்தனி வையம்பட்டி முத்துசாமி, “தேக்கு மரமாட்டம்…” என்கிற பாடலை எழுதி இருக்கிறார்.
நானும், அண்ணன் சீமானும் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறோம். நாங்கள் கதையின் நாயகனாக நடித்திருக்கிறோம். மற்றப்படி இந்தப் படத்திற்கு மூன்று பேர் முக்கிய கதாநாயககர்கள். அவர்களில் முதலானவர் இசையமைப்பாளர் வித்யாசாகர். தூங்க போகும் போதும், தூங்கி எழுந்த பிறகும் கேட்க கூடிய பாடலாக இந்தப் படத்தின் பாடல்கள் இருக்கனும் என்று கேட்டுக்கொண்டேன்.
“கதை என்னை இயக்கனும், சொன்ன வார்த்தைகள் மெய்பிக்கனும்”னு சொன்னார். அதே மாதிரி பாடல்களை தந்திருக்கிறார். கேட்க கேட்க இன்னும் பிடிக்கும். படத்திற்கு பின்னணி இசை அமைக்க கொஞ்சம் டயம் எடுத்துக்கொண்டார். “உடல்தான் நான் கொடுத்துருக்கிறேன். இதற்கு கண்ணும், உயிரும் நீங்கதான் தரனும்”னு சொன்னேன். பிறகு பிரிவியூ தியேட்டரில் படம் போட்டு பார்த்த பிறகு அவரை கட்டி பிடித்து அழுதுவிட்டேன். நம்பிக்கையெல்லாம் பெரிய நம்பிக்கையா வாழ்க்கை இருக்கு. இந்தப் படம் ஒரு அதிர்வை ஏற்படுத்தும்.
கோடம்பாக்கத்தில் எழுபது சதவீதம் தயாரிப்பாளர்களுக்கு இந்த கதை தெரியும். அத்தனை பேரிடமும் இந்த கதையை சொல்லியிருக்கிறேன். நான் ஒரு இடத்தில் கதை சொல்கிறேன் என்னறால் இந்த கதையைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று மற்றவர்களுக்கு தெரியும். அப்படி கதை சொல்லும் போதெல்லாம் என்னை நடிகனாக ஏற்க மறுப்பார்கள். வேறு நாயகனை நடிக்க வைக்கலாம் என்பார்கள். நான் பெரிய அழகன் கிடையாது. ஆனால் இந்த பாத்திரத்துக்கு பொறுத்தமாக இருப்பேன் என்று அவர்களிடத்தில் சொல்வேன். அதனால் எனக்கு நிறைய அவமானம், ரணங்கள் கிடைத்திருக்கிறது. அந்த அவமானங்களை அஸ்திவாரமாக நினைத்து போராடினேன்.
அதற்கு முற்று புள்ளி வைத்தார் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மணிவண்ணன். பனிரெண்டு வருஷமாக இந்த கதையை வைத்துக்கொண்டு அலைந்தேன். அதற்கு முற்றுபுள்ளி வைத்திருக்கிறார் இவர். நான் அவரிடம், “நிறைய படம் பார்க்கிறீர்கள். நல்ல ரசிகராக இருக்கிறீர்கள். நான் ஒரு கதையை சொல்கிறேன். கேளுங்கள் எப்படி இருக்கு என்று சொல்லுங்கள்” என்று கூறினேன். “சரி வா” என்றார்.
அவரிடம் சென்று மூன்றரை மணி நேரம் கதையைச் சொன்னேன். அவர் அடுத்த ஐந்து செகன்டுக்குள் “எப்ப ஆரம்பிக்கிறீங்க… நான் ரெடி” என்று சொன்னார். பனிரெண்டு வருஷ போராட்டம். ஆனால் ஐந்து செகண்டுக்குள் பதில் கிடைத்தது. இவர் இந்தப் படத்தோட இன்னொரு கதாநாயகன்.
அடுத்து, இந்த கதையை எழுதிய நீல.பத்மநாபன். நான் நடிக்க வந்து பல முயற்சிகள் செய்துவிட்டு, உதவி இயக்குநராக டிஸ்கஷன் வேலைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேலையில், இந்த சினிமாவே வேண்டாம் என்கிற அளவுக்கு சினிமா எடுப்பதில் உள்ள நிலமையை நினைத்து ஊருக்கே போய்விட நினைத்தேன். அப்போது என் கையில் கிடைத்துதான் இந்த ‘தலைமுறைகள்’ என்கிற நாவல். இந்த நாவலில் எல்லாம் இருக்கிறது. இதை ஏன் படமாக்க கூடாது என்று எண்ணினேன். அந்த முடிவு இப்போது படமாகி இருக்கிறது.
சீஙமான் ஒரு போராளி. அவர் படத்தில் வரும் இடங்களில் அரசியல் இருக்காது. ஆனால் அதிர்வா இருக்கும். உயர்வா இருக்கும். நான் அஞ்சலியை நடிக்க பேசிய போது ‘அங்காடி தெரு’ பார்க்கலை. படத்தை பார்த்தீங்கன்னா அவுங்க ஒரு நல்ல பாத்திரத்துல நடிச்சிருக்காங்க. பிரகாஷ்ராஜ், சம்பத், கார்த்திகா, கஞ்சா கருப்பு, வி.எஸ்.ராகவன், சுகுமாரி என எல்லோரும் நிறைவான நடிப்பை வழங்கி படத்துக்கு உதவியிருக்காங்க.
ஒளிப்பதிவாளர் செழியன், படத்தொகுப்பாளர் மு.காசிவிஸ்வநாதன், ஆர்ட் டைரக்டர் செல்வராஜ், என்னுடைய உதவி இயக்குநர்கள் செந்தில், பாலமுரளிவர்மன் என அனைவரும் இந்தப் படத்திற்கு பெரிய உதவியாக இருந்திருக்கிறார்கள். என்னுடைய படைப்புகள் உண்மை சம்பவத்தை அடிப்படையில் உருவாகிறது. எனது அடுத்த படைப்பான வன்னிக்காடு படமும் அப்படித்தான் அமையும்…” இவ்வாறு பேசினார் கெளதமன்.
