Sunday, February 5th, 2012

காமெடி படங்களில் நடிக்கத்தான் ஆசை – த்ரிஷா

Published on August 31, 2010 by   ·   No Comments

“உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்கும்போது நான் ஏன் ஜெஸி உன்னை மட்டும் லவ் பண்ணனும்…?” என்று ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் ‘ஜெஸி’யான த்ரிஷாவிடம் கெஞ்சியபடி சிம்பு பேசும் இந்த வசனம், தமிழகத்தின் ஒட்டுமொத்த இளசுகளுக்கும் இன்று அத்துப்படி! அது மட்டுமா? “ஒரு அழகு தேவதை தெருவில் ஆடைக்கட்டி வருகிறது என்றால் அது ஜெஸியாக இருக்கலாம்” என்று இளவட்டங்களை உளற வைத்து, அழகி(ய)ச் சூறாவளி ‘ஜெஸி’யாய் வந்து அந்தப் படத்தில் எல்லோருடைய மனங்களையும் அள்ளிச் சென்றிருந்தார் த்ரிஷா. ஜெஸி பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து, இளைஞர்களின் மனதில் மட்டுமின்றி, பலரின் மனதிலும் ஏக்கத் தீயை வளர்த்திருந்த த்ரிஷா, கமலுடன் ‘மன்மதன் அம்பு’ படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பை முடித்துத் திரும்பியிருக்கிறார் என்பதை அறிந்தவுடன், மனம் படபடத்தது. “கோலிவுட்டில் எத்தனையோ நடிகைங்க இருந்தாலும் ஏன் ஜெஸி உன்னை மட்டும் கண் தேடுது…” என்று தாறுமாறாக வந்து விழுந்த வசனத்தை உச்சரித்தபடியே, த்ரிஷாவின் வீட்டுக்கதவைத் தட்டினோம். முதலில் வரவேற்றது அவருடைய அம்மா. பின்னர் புன்னகையை வீசியவாறு வெளியே வந்தார் த்ரிஷா. ம்ஹூம் ஜெஸி… காபி வித் த்ரிஷாவுடன் ஒரு கலகல உரையாடல் தொடங்கியது.

‘கட்டா மிட்டா’ படத்தின் வரவேற்பு எப்படி இருக்கிறது?

நல்லாயிருக்கு. தமிழில் என்னை அறிமுகப்படுத்திய பிரியதர்ஷன் சார்தான் ஹிந்தியிலும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்தப் படம் “ரோடு கான்ட்ராக்ட்” பிரச்சினையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் அக்ஷய்குமார் ரோடு கான்ட்ராக்டராகவும், நான் மாநகராட்சி அதிகாரியாகவும் நடித்திருக்கிறேன். பெரும்பாலான படங்களில் கதாநாயகன் வந்து காப்பாற்றுவது போன்ற காட்சியில் தான் கதாநாயகி அறிமுகமாவாள். ஆனால் இந்தப் படத்தில் அப்படியெல்லாம் இருக்காது. இப்படத்தை அக்ஷய்குமாரே தனது “ஹரி ஓம் புரொடக்ஷன்ஸ்” நிறுவனத்திற்காகத் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் ‘புரமோ’விற்கு நீங்கள் வரவில்லையென்று அக்ஷய்குமார் உங்கள் மீது கோபப்பட்டாராமே?

புரமோ எடுக்கும்போது நான் ‘மன்மதன் அம்பு’ படப்பிடிப்பில் இருந்தேன். நான் வரமுடியாத சூழலை அவங்களும் புரிஞ்சுக்கிட்டாங்க. இப்போ பிரச்சினை ஒன்றும் இல்லை.

‘கட்டா மிட்டா’வில் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறதே…?

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் புடவைக் கட்டிக்கொண்டுதான் நடித்தேன். ஒரேயொரு பாடல் காட்சியில் மட்டும்தான் கொஞ்சம் கவர்ச்சியாக நடித்திருப்பேன். மற்றபடி, ஹிந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிப்பதற்கு நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன். கதைக்குத் தேவையிருந்தால் கவர்ச்சி காட்டி நடிப்பதில் தவறில்லையே!

நீங்கள் மும்பையில் வீடு வாங்கியிருப்பதாக செய்திகள் அடிபடுகிறதே?

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்ய இருக்கிறார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சார்! இப்படத்தில் பாலிவுட்டில் பிரபல ஹீரோவாக விளங்கிய ராஜ் பாப்பரின் மகன் ப்ரதிக் பாப்பர் கதாநாயகனாக நடிக்கிறார். நான் அவருக்கு ஜோடியாக நடிக்கிறேன். எனக்கும் மும்பையில் தங்குவதற்கு இஷ்டம்தான்! பாலிவுட்டில் எனக்குள்ள வரவேற்பை பொறுத்தே மும்பையில் வீடு வாங்கும் முடிவை எடுப்பேன். ஆனால், என்னுடைய குடும்பத்தினருக்கு சென்னையை விட்டு வர மனமேயில்லை. அதனால் மும்பையில் வீடு வாங்குகிறத் திட்டமும் இப்போது என்னிடம் இல்லை. கவலைப்படாதீங்க! நான் எப்போதும் சென்னை வாசிதான்!

உங்களுக்கு ஹிந்தி பேச சிரமமாக இருந்ததா?

ஹிந்தி எனக்கு சரளமாக பேசத் தெரியாது. காரணம், நான் சென்னைப் பொண்ணு என்பதால்தான். தெலுங்கில் கூட பல படங்களில் நடித்திருக்கிறேனேத் தவிர, எனக்குத் தெலுங்குகூட கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும். நான் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசித்தான் சமாளித்துக் கொண்டிருக்கிறேன். ஹிந்தியில் பிரியதர்ஷன் சார் இயக்கத்தில் நடித்ததால் எனக்கு மொழிப் பிரச்சினையெல்லாம் ஒன்றும் வரவில்லை. அவருடைய டீமில் இருந்த எல்லோரும் எனக்கு முழு ஆதரவு கொடுத்ததால் சிறப்பாக நடிக்க முடிந்தது. இப்போது, ‘மன்மதன் அம்பு’ படத்தில் சொந்தக் குரலில் பேசி நடிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கமலுடன் நடிப்பது குறித்து?

கமல் சாருடன் நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. அவரிடம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது. ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு புதிய விஷயத்தை அவரிடமிருந்து கற்றுக்கொண்டு வருகிறேன். தற்போதுதான் முதன் முறையாக நான் கே.எஸ்.ரவிக்குமார் சார் இயக்கத்தில் நடிக்கிறேன். அவரும் நிறைய விஷயங்களை எனக்கு சொல்லிக் கொடுத்து சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு புது அனுபவமாக இருக்கிறது. எப்போதும் உற்சாகமாக சிரித்துப் பேசிக்கொண்டு, நன்கு சொல்லிக் கொடுத்து நடிக்க வைக்கிறார் ரவிக்குமார் சார். எனக்கு நடிக்கப் போனது மாதிரியே தெரியவில்லை. ஏதோ சுற்றுலா போய் வந்தது மாதிரிதான் இருந்தது.

படப்பிடிப்பின்போது காணாமல் போய் விட்டீர்களாமே?

அதெல்லாம் வெறும் வதந்திதான். பொதுவாக படப்பிடிப்பின் இடைவேளையின் போது நான் அம்மா கூடத்தான் இருப்பேன். ‘மன்மதன் அம்பு’ படத்தின் படப்பிடிப்பை பிரம்மாண்ட கப்பலில் வைத்திருந்தார்கள். அந்தக் கப்பலில் நிறைய ஷாப்பிங் மால்களும் இருந்தன. அம்மாவுடன் அந்த இடங்களையெல்லாம் சுற்றிப் பார்த்தேன். மற்றபடி படப்பிடிப்பின்போது காணாமல் எல்லாம் போகவில்லை.

உங்கள் அம்மா உமா கிருஷ்ணனும் இந்தப் படத்தில் நடிப்பதாக பேச்சு அடிபடுகிறதே?

அதுவும் வதந்திதான்! அம்மாவுக்கு எப்போதும் நடிப்பில் ஆர்வம் இருந்ததில்லை. நான் நடிப்பதில்தான் அவருக்கு சந்தோஷம்!

உங்களைப் பற்றி வரும் கிசுகிசுவை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

நடிகைகளைப் பற்றி கிசுகிசு வருவது சர்வ சாதாரணம். அதுவும் கூட ஒரு வகையில் நடிகைகளுக்கு விளம்பரமாகத்தான் இருக்கிறது. எனவே நான் கிசுகிசுக்களை விளம்பரமாகத்தான் எடுத்துக்கொள்கிறேன்.

தற்போது நடித்து வரும் படங்கள் பற்றி?

தமிழில் ‘மன்மதன் அம்பு’, ஹிந்தியில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ஆகிய படங்களுக்குத்தான் என்னுடைய தேதிகளை அதிகமாக ஒதுக்கியிருக்கிறேன். அதனால் தற்போது வேறு எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை.

எந்த மாதிரியான படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?

எனக்குப் பெரும்பாலும் காமெடி படங்களில் நடிக்க வேண்டும் என்றுதான் ஆசை இருக்கிறது. அதன் பிறகுதான் ஆக்ஷன், காதல் படங்களெல்லாம்! தெலுங்கில் நான் நடித்த ‘அத்தடு’, ‘வர்ஷம்’ எல்லாம் காமெடி படங்கள்தான். இந்தப் படங்களிலெல்லாம் என்னுடைய பாத்திரம் நகைச்சுவையாக இருக்கும். நகைச்சுவையை விரும்பாதவர்கள் யாராவது இருப்பார்களா? அதனால்தான் அந்தப் பாத்திரத்தின் மீது எனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors