Sunday, February 5th, 2012
Pirapalam.Com

நடிகர் முரளி மரணம்-மாரடைப்பால் உயிர் பிரிந்தது!

Published on September 8, 2010 by   ·   1 Comment

பிரபல நடிகர் முரளி மாரடைப்பால் இன்று அதிகாலை திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 46. சென்னை வளசரவாக்கம் இந்திரா நகரில் நடிகர் முரளி வீடு உள்ளது. மனைவி ஷோபா. காவியா என்ற மகளும் ஆதர்வா, ஆகாஷ் என்ற மகன்களும் உள்ளனர். வழக்கமாக அதிகாலையில் எழுந்துவிடும் பழக்கம் உடையவர் முரளி. இன்று காலை 5 மணிக்கு அவரை மனைவி ஷோபா எழுப்பியபோது, அசைவற்று கிடந்தார். அதிர்ச்சியடைந்த ஷோபா, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்து பார்த்த டாக்டர், ஒரு மணி நேரம் முன்பே அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து முரளியின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான திரைப்பட நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை காலை இறுதிச் சடங்கு நடக்கிறது. பிரபல கன்னட இயக்குனர் சித்தலிங்கய்யாவின் மகன் முரளி. பல ஹிட் படங்களை தந்தவர் சித்தலிங்கய்யா. 1980-களில் சில கன்னட படங்களில் முரளி நடித்தார். 1984&ல் பாலசந்தர் தயாரிப்பில் அமீர்ஜான் இயக்கிய ‘பூவிலங்கு’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். அடுத்து மணிரத்னம் இயக்கிய ‘பகல் நிலவு’ படத்தில் நடித்தார். இரண்டு படங்களும் பெற்ற வெற்றிகளால் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இதைத் தொடர்ந்து ‘தங்கமணி ரங்கமணி’, ‘புது வசந்தம்’, ‘பாலம்’, ‘நானும் இந்த ஊருதான்’, ‘புதிய காற்று’, ‘மண்ணுக்குள் வைரம்’, ‘என் ஆசை ராசாவே’, ‘நம்ம ஊரு பூவாத்தா’, ‘இதயம்’, ‘என் ஆசை மச்சான்’, ‘வெற்றிக்கொடி கட்டு’, ‘பொற்காலம்’ என ஏராளமான தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார். தமிழ், கன்னட மொழிகளில் 80&க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தனது மகன் ஆதர்வா ஹீரோவாக அறிமுகமான ‘பாணா காத்தாடி’ படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். நடிகர்கள் சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், சூர்யா, சரத்குமார், மம்மூட்டி ஆகியோருடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

‘இதயம்’ படத்தில் கல்லூரி மாணவராக முரளி நடித்தார். அதில் அவரது கேரக்டர் பிரபலமானது. இதைத் தொடர்ந்து பல படங்களில் கல்லூரி மாணவராக நடித்திருக்கிறார் முரளி. அப்பாவித்தனமான முகம், மென்மையாக பேசும் குணம் ஆகியவற்றால் ரொமான்டிக் ஹீரோ என்ற இமேஜுடன் திரையுலகில் வலம் வந்தார். 2001-ம் ஆண்டு கலைமாமணி விருது பெற்ற இவர், தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை இரு முறை வாங்கியுள்ளார். சின¤மாவில் அறிமுகமானபோது, கன்னட நடிகை ஷோபாவை காதலித்தார். இந்த காதலை முரளியின் குடும்பத¢தார் ஏற்கவில்லை. எதிர்ப்பை மீறி ஷோபாவை திருமணம் செய்தார். பின்னர் அவர்களை இரு குடும்பத்தாரும் ஏற்றுக்கொண்டனர். அவரது மகன் அதர்வாவை சமீபத்தில் ஹீரோவாக்கி அழகு பார்த்தார் முரளி. அவர் ஹீராவோக நடித்த முதல் படமான பாணா காத்தாடியில் முரளியும் சிறிய ரோலில் நடித்திருந்தார். மகன் நடித்த முதல் படமே முரளியின் கடைசிப் படமாக அமைந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முரளிக்கு வயது 47 ஆகிறது. முரளியின் திருமணம் காதல் திருமணமாகும். அவரது மனைவி பெயர் ஷோபா.

முரளியின் மறைவு செய்தி கேட்டு தமிழ் திரைப்பட உலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. முரளியின் மறைவிற்கு தமிழ் முன்னணி நடிகர்களும், நடிகைகளும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Photos: Behindwoods

Readers Comments (1)

  1. navinan says:

    முரளி ஓர் உணர்ச்சிபூர்வமான உன்னதமான மிகச் சிறந்த நடிகர். அவரது குடும்பத்திற்கு எனது அனுதாபங்கள்.

    Like or Dislike: Thumb up 0 Thumb down 0




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors

Pirapalam