Sunday, February 5th, 2012
Pirapalam.Com

நடிகர் முரளி உடல் இன்று தகனம்-படப்பிடிப்புகள் ரத்து

Published on September 9, 2010 by   ·   No Comments

மறைந்த நடிகர் முரளியின் உடல் இன்று மாலை சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. அவரது உடலுக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்குகளையொட்டி இன்று திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மாரடைப்பு காரணமாக நேற்று காலை நடிகர் முரளி அகால மரணமடைந்தார். திரையுலகை பெரும் அதிர்ச்சியிலும்,சோகத்திலும் ஆழ்த்தியுள்ள இந்த மரணம் அவரது குடும்பத்தை நிலைகுலைய வைத்துள்ளது.

வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் முரளியின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் ரஜினிகாந்த் , சரத்குமார் , வாகை சந்திரசேகர், ராதாரவி, சிவக்குமார், பார்த்திபன், சூர்யா, ஆனந்த்பாபு, அர்ஜூன்,கார்த்திக், சுரேஷ், மோகன், பிரசன்னா, ஷாம், கரண், சரவணன், விவேக், நாசர், ராஜேஷ், இளவரசு, சின்னி ஜெயந்த்,தியாகு, தலைவாசல் விஜய், நடிகைகள் குயிலி, ராதிகா, பாத்திமா பாபு, சத்யப்பிரியா, ரேவதி, சினேகா உள்ளிட்டோரும்,

இயக்குநர்கள் சேரன், அகத்தியன், லிங்குச்சாமி, ஹரி, பாலாஜி சக்திவேல், தருண் கோபி, களஞ்சியம், விக்கிரமன் உள்ளிட்டோரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் கமல்ஹாசன் மன்மதன் அம்பு படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருப்பதால் அவர் நேரில் வர முடியவில்லை. இதனால் தொலைபேசி மூலம் முரளியின் மகன் அதர்வாவிடம் பேசி இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

மயங்கி விழுந்த தங்கர் பச்சான்:

இயக்குநர் தங்கர்பச்சான் முரளியின் மிகநெருங்கிய நண்பர் ஆவார். நேற்று இறுதி அஞ்சலி செலுத்த அவர் வந்தபோது துக்கம் தாங்காமல் கதறி அழுதார். இதனால் அந்த இடமே உருக்கமாகிப் போனது. துக்கம் அதிகரித்து கதறி அழுததால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை வெளியே அழைத்து வந்து அமர வைத்து மயக்கம் தெளிவித்தனர்.

இன்று காலை 10 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்குகிறது. வளசரவாக்கத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட டிரக்கில் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இன்னொரு டிரக்கில் நடிகர், நடிகையர் வரவுள்ளனர்.

பிற்பகல் வாக்கில் பெசன்ட் நகர் மயானத்தை ஊர்வலம் வந்தடையும். அங்கு அவரது உடல் தகனம் செய்யப்படும்.

படப்பிடிப்புகள் ரத்து:

முரளியின் இறுதிச் சடங்கையொட்டி இன்று முழுவதும் தமிழ்த் திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் கவுன்சில் அறிவித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கம் முரளியின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவருமான நடிகர் முரளி எதிர்பாராதவிதமாக இயற்கை எய்தியது குறித்து தமிழ் திரைப்பட உலகம் மீளா துயரத்தில் மூழ்கியுள்ளது.

ஈடுசெய்ய முடியாத இழப்பினால் வாடும் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் ஆகியோரின் வேதனையில் தென்னிந்திய நடிகர் சங்கம் பங்குகொண்டு, கனத்த நெஞ்சத்துடன் எங்கள் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளது.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors