
நடிகர் முரளியின் மகன் அதர்வா. பாணா காத்தாடி படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அண்மையில் அந்தப் படம் வெளியாகி வெற்றிக்கரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து தந்தையும் மகனும் சேர்ந்து தினகரன் வெள்ளி மலருக்கு டூயட் பேட்டி அளித்திருந்தனர். அதில் அவர்கள் பேசியது இங்கே அப்படியே வெளியிட்டிருக்கிறோம்.
செஞ்சுரியை நெருங்குகிறார் ஹீரோ முரளி. தந்தை இன்னும் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் போதே, களத்தில் இறங்கி இருக்கிறார் அதர்வா. முரளியின் வளர்ந்த(உயரம் 6.2) வாரிசு. பாணா காத்தாடி போல உயரப்பறக்க காத்திருக்கும் இளம் வரவு. இவர்களின் டூயட்…..
முரளி: ஷோமுல் நீ பாட்டுக்கு ஹீரோவா நடிச்சிட்ட. நான்தான் தியேட்டர் தியேட்டரா அலைஞ்சிட்டிருக்கேன் தெரியுமா? (செல்லப் பெயர் விளக்கம்: அம்மா ஷோபா + அப்பா முரளி = ஷோமுல்)
அதர்வா: நீங்க ஏன் டாடி. வயசான காலத்துல இப்படி அலையுறீங்க?
முரளி: என்னது…ஒரு படத்துல நீ ஹீரோவா நடிச்சிட்டா நான் வயசானவனா? நான் இன்னிக்கும் ஹீரோதான்டா. இன்னும் மெடிகக்கல் காலேஜ் பைனல் இயர் ஸ்டூடண்டுதான் தெரியுமா? நீ சினிமாவுல அறிமுகமாகுறதுக்கு முரளி மகன்கள அடையாளம் போதும்தான். ஆனா, அடுத்த கட்டத்துக்கு போகணும்னா எல்லார் மனசுலயும் நீ ரிஜிஸ்டர் ஆகணும். அது பாணா காத்தாடில கிடைச்சிருக்கு. அதுக்காக நான் சும்மா இருந்துட முடியுமா? திேணுட்டர் தியேட்டரா போயி இவன் என் மகன். பார்த்துக்குங்கனு ரசிகர்கள்கிட்ட, ஒரு தகப்பனா கேட்க வேண்டியது என் கடமையில்லையா?
அதர்வா: சந்தோஷமா இருக்குப்பா. உங்க நம்பிக்கையும், ஆசையையும் நிச்சயமா காப்பாத்துவேன். அதுக்காக நீங்க இன்னும் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்டா நடிப்பேன்னு சொல்றதைத்தான் தாங்கிக்க முடியல. உங்களை வச்சே, உங்களை கிண்டல் பண்ணி பாணா காத்தாடில சீன் வச்சும் திருந்த மாட்டேங்றீங்களே?
முரளி: நீ ஆயிரம் இருந்தாலும் அம்மா புள்ளைதான்டா. அதான் அப்பாவை கிண்டல் பண்ற சரி, என் மகன்தானே பண்ணிக்கட்டும்னு அந்த சீன்ல நடிச்சுக் கொடுத்தேன். இன்னிக்கும் இதயம் ராஜா னு சொன்னதும் ரசிகர்கள் என்னமா கைதட்டுறாங்க. 19 வருஷத்துக்கு முன்னாடி வந்த படம் ரசிகர்கள் மத்தியில நிக்குதுன்னா பாத்துக்க… அந்த மாதிரி உன் படங்களும் சாதிக்கணும்.
அதர்வா: உங்களடோ எல்லாப் படமும் எனக்கு பிடிக்கும், ஆனா ஏன் டாடி 14 ரீல் வரைக்கும் காதலைச் சொல்லாமலே இருக்கீங்க?
முரளி: ஷோமுலு குட்டி… அப்பா படத்துல தான்டா அப்படி. நிஜத்துல உங்கம்மாவை காதலிச்ச ஒரு வாரத்துல ஐ லவ் யூ ஷோபானு அத்தனை லாங்குவேஜ்லேயும் சொல்லிட்டேன். ஏன்னா அரை இஞ்சுக்கு மேக்கப் போட்டாலும் அப்பா கலரு உனக்குத் தெரியும். ஆனா, உங்க அம்மா ரோஸ் கலரு. கொஞ்சம் அசந்தா வேற எவானவது காதலைச் சொல்லிடப் போறானோன்னு பயம். அதனால டக்குன்னு சொல்லிட்டேன். நீயும் யாரையாவது காதலிச்சா டக்குன்னு சொல்லிடு. ஆனா, காதலிக்கிற பொண்ணு வெறும் மனைவியா மட்டும் இல்லாம ஒரு தாயாவும் இருப்பாளானு மட்டும் பாத்துக்க. ஏன் சொல்றேன்னா இன்னிக்கு நான் இளமையா, மகிழ்ச்சியா இருக்கேன்னா அதுக்கு காரணம், உங்கம்மா எனக்கும் அம்மாவாக இருக்கறது தான்…
அதர்வா: அம்மாவுக்கு என்ன ஐஸ் கைக்குறீங்க…. (முரளி முகம் சுருங்க) சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டாடி. அம்மா மேல நீங்க வச்சிருக்க பாசம் எங்களுக்குத் தெரியும். அதே மாதிரிதான் நான், அக்கா, தம்பி எல்லாருமே. நீங்க ஷூட்டிங், ஷூட்டிங்குன்னு பாதிநாள் வெளியூர்லதான் இருப்பீங்க. ஸோ, நாங்க அம்மா கூட இருந்த நேரம்தான் அதிகம். அதனால அம்மா பிள்ளையாவே வளர்ந்துட்டோம். ஆனாலும் அதே அளவு பாசம் உங்க மேலயும் இருக்கு. எங்களுக்கு சுதந்திரம் கொடுத்து, அப்படி பாத்துகிட்டீங்க டாடி. ஆனா, நடிக்க மட்டும் சொல்லித்தர மாட்டேன்னு மறுத்துட்டீங்களே?
முரளி: அப்படியில்ல ஷோமுலு, நான் உனக்கு நடிப்புச் சொல்லித் தந்தா, நீ இன்னொரு முரளியாத்தான் வருவே. ஒரு முரளியவே தாங்க முடியாம சினிமாத் தவிக்குது. இதுல இன்னொரு முரளி தேவையா?. அதான் நாசர்கிட்ட அனுப்பினேன். நானெல்லாம் சும்மாடா…. வேட்டிய மடிச்சுகட்டி அரிவளைத் தூக்கிக்கிட்டு, சண்டை போட்டுகிட்டு, மைக்கை தூக்கிப் பாடிக்கிட்டு, சட்டைக் காலரை பிடிச்சுகிட்டு வனம் பேசி, கடைசி வரைக்கும் காதலைச் சொல்லாத கேரக்டர்லேயே நடிச்சு முடிச்சாச்சு. என்னை விட நாசர் சார் மாதிரி கேரக்டர் ஆர்ட்டிஸ்டுங்ககிட்டதான் நடிப்பு கத்துக்க முடியும். அதான் அவர்கிட்ட அனுப்பி வச்சேன்.
அதர்வா: அக்காவை டாக்டராக்கின மாதிரி, என்னை இன்ஜினியராக்கணும்னு ஆசைப்பட்டீங்க. நான் திடீர்னு நடிக்கணும்னு சொன்னப்ப நீங்க வருத்தப்பட்டீங்களா?
முரளி: நிச்சயமா இல்லை. நீ என்கிட்ட சொல்றதுக்கு முன்னாடியே, நானும் உங்க அம்மாவும் உனக்குள்ள நடிக்கிற ஆசை இருக்குனு புரிஞ்சுகிட்டோம். நீ எங்களுக்கு பயந்து கதவைப் பூட்டிகிட்டு விடிய விடிய திருட்டுத்தனமா படம் பார்த்துகிட்டிருந்ததை கண்டுபிடிச்சோம். அப்பவே முடிவு பண்ணினேன். ஆஹா… நம்ம வீட்டுல இன்னொரு ஹீரோ இருக்கான்னு. அதுக்குப் பிறகுதான் நீ வந்து சொன்னே. சந்தோஷமாக இருந்துச்சு. என்னைவிட உங்கம்மாவுக்கு பெரிய சந்தோஷம். ஏற்கனவே ஒரு விஜய் இருக்குறதால உன்னோட பெயரை அதர்வான்னு மாத்தினா. (உச்சிஷ்ட மகா கணபதியின் இன்னொரு பெயர் அதர்வா) நானும் சண்டை, டான்ஸ் கத்துக்க அனுப்பி வச்சேன்.
அதர்வா: நல்ல காலம் டான்ஸ் கத்துகிட்டேன். இல்லேன்னா முரளி பையன் அவர் மாதிரியே ஆடுறான்னு எல்லாரும் கிண்டல் பண்ணியிருப்பாங்க.
முரளி: பிரபுதேவாப் பாருங்க எப்படி ஆடுறாருனு என்னை கிண்டல் பண்ணுவ. நானும், தஞ்சாவூரு மண்ணெடுத்து, தாமிரபரணி தண்ணிய வச்சுன்னு…. ஆடியிருக்கேன். ஆனா பிரபு தேவா பிரேக் உள்ள பைக். நான் பிரேக் இல்லாத மாட்டுவண்டி. என்னோட டான்ஸ் அவ்வளவளோதான் இருக்கும். ஆனா நீ பாணா காத்தாடில சூப்பரா ஆடியிருக்க. நம்மளால முடியாததை நம்ம பையன் செய்யறானேன்னு சந்தோஷப்பட்டேன்.
அதர்வா: உங்கள பாத்து ஹீரோவா ஆசைப்பட்டாலும் கமல் சாரைப் பார்த்துதான் நடிக்க ஆசைப்பட்டேன். அவர்தான் எனக்கு மானசீக குரு. முதல் பட பூஜைக்கு நீங்க எனக்கு நான் ஆசைப்பட்ட காரை பிரசண்ட் பண்ணி, சர்ப்ரைஸ் கொடுத்தீங்க. கமல் சார் பூஜைக்கு வரலை. ஆனா, மறுநாள் அவர் ஆபீசுக்கு கூப்பிட்டு என்னோடு போட்டோ எடுத்து, அதை ஆள் உயரத்துக்கு புளோ-அப் பண்ணி அதுல, தோளுக்கு மிஞ்சிய தோழா, தொழிலிலும் மிஞ்சிய வாழ்த்துக்கள்னு எழுதி கையெழுத்துப்போட்டு கொடுத்தார். ரெண்டுமே எனக்குப் பொக்கிஷங்கள்.
முரளி: உனக்கு கமல் சார் மாதிரி, எனக்கு சிவாஜி சார். என்னதான் முட்டி மோதிப்பார்த்தும் அவர் பக்கத்துல கூட நெருங்க முடியல. நீயாவது கமல் சார்கிட்ட நெருங்க முடியாட்டியும் அவர் மாதிரி புதுசு புதுசா நடி. சினிமாவை வெறித்தனமா நேசி. சினிமாவுல கிடைச்சதை சினிமாவுக்கே கொடு. வாழ்த்துக்கள் ஷோமுலு.
அதர்வா: தேங்க்ஸ் டாடி.
தொகுப்பு – மீரான்
நன்றி: தினகரன்.