
ஆக்ஷன் படங்களுக்கு ஏற்ற விறுவிறுப்பான பாடல்களுக்கு இயக்குனர்களின் முதல் சாய்ஸ், தேவி ஸ்ரீபிரசாத். கமர்ஷியல் படங்களின் இசை நாயகன். இப்போது ‘சிங்கம்’ படத்தில் இவர் அமைத்த மெட்டுக்கள் பட்டி தொட்டியெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
‘சிங்கம்’ படத்தில் பாடல்கள் எப்படி?
நான் பணியாற்றிய படங்களிலேயே வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த படம். இயக்குனர் ஹரி என்னிடம் கதையை சொன்னபோதே உற்சாகம் பிறந்து விட்டது. எல்லாமே பரபரப்பான பாடல் சூழல்கள். அதே நேரம், ஹரி ஒரு கண்டிஷன் போட்டார். அதாவது, ‘எனது முந்தைய படங்களில் இடம்பெற்ற பாடல்களின் சாயல், கொஞ்சம்கூட இருக்கக் கூடாது’ என்றார். அதனால் அதிக நேரம் எடுத்து, 6 பாட்டையும் 6 விதமாக கொடுத்தேன். அதில் ஹீரோ அறிமுக பாட்டு மட்டும் ஹரி விருப்பம்.
வித்தியாசம் என்றால் எப்படி?
ஹரி படப் பாடல்களில் கிராமிய மெலடி இருக்கும். அல்லது குத்துப் பாடல் இசை இருக்கும். இதில் அந்த இரண்டுமே இருக்காது. பாடல்கள் எல்லாமே மாடர்ன¢ ஸ்டைலில் இருக்கும். கதையோ லோக்கலாக இருக்கும், இந்த இரண்டையும் மேட்ச் செய்வதே பெரிய சவாலாக இருந்தது. அது இப்போது புதுமையாக வந்துள்ளது.
பின்னணியில் நிறைய தீம் இசை இருக்கிறதாமே?
உண்மைதான். பொதுவாக ஒரு படத்துக்கு ஒரு தீம் இசைதான் இருக்கும். இந்த படத்தின் கதைக்கு நிறைய தேவைப்பட்டது. ஹீரோ துரை சிங்கம் முதலில் சாதாரண நபர். அப்போது ஒரு தீம் இசை இருக்கும். அதன் பிறகு அவர் போலீசில் சேருகிறார். கொஞ்சம் வேகமான தீம் இசை இருக்கும், கடைசியில் எதிரிகளை வெறியோடு வேட்டையாடுவார். அப்போது ஒரு தீம் இசை இருக்கும். இப்படி கேரக்டரின் போக்கிற்கு ஏற்ப தீம் இசை அமைத்திருக்கிறேன்.
ஒரு பாடலின் வெற்றி எதில் இருக்கிறது?
ஒலி வடிவில் இசை அமைப்பாளர் பாடலை தருகிறோம். அருமையான படப்பிடிப்பும் அதில் நடிக்கும் கலைஞர்களும்தான் பாடலுக்கு உயிர் தருகிறார்கள். சில பாடல்கள் தியேட்டரில் நன்றாக இருக்கிறது என்று சொல்வோம். அப்படியென்றால் அந்தப் பாடலுக்கு அந்த கலைஞர்கள்தான் உயிர் கொடுத்திருக்கிறார்கள் என அர்த்தம். அழகாக காட்சிப்படுத்தாத பாடல்கள் மக்கள் மனதில் நிற்பதில்லை.
