
திருட்டுத்தனமாக ராமேஸ்வரம் கோவிலில் விஜயலட்சுமி கழுத்தில் தாலிகட்டுகிறார் கிருஷ்ணா. அடுத்த சில நிமிடங்களில் அவரை தேடிக்கொண்டு வருகிறது ஒரு கும்பல். அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஜோடி, போலீஸ் அதிகாரி சம்பத்திடம் சிக்கிக்கொள்கிறது. இந்த ஜோடிக்கு பின்னால் பெரிய கதையே சுழல்கிறது. தன்னை ஏமாற்றிய வங்கி அதிபரை பழிவாங்குவதற்காக அவரிடம் மிரட்டி பணம் பறிக்கிறார் கிருஷ்ணா. அவருக்கு விஜயலட்சுமி உடந்தையாக இருக்கிறார். கேட்ட பணம் கைமேல் கிடைத்ததால், ஏமாற்றி சம்பாதிப்பதுதான் சரி என்று பல்வேறு வேடம்போட்டு பணத்தை அபேஸ் செய்கின்றனர். ஒரு கட்டத்தில் இவர்களின் குட்டு வெளிப்படுகிறது.
இதையடுத்து போலீசும், மர்ம கும்பலும் இவர்களை குறி வைக்கிறது. இந்த வேட்டையில் ஜோடிகளின் கதி என்ன ஆனது என்பது கதை.
‘இந்தியாவில் கோடிக்கணக்கில் ஏழை மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் சேமித்து வைத்தால் அது பல கோடியாக பெருகும். அதைக்கொண்டு ஏழைகளுக்கு எளிதாக உதவ முடியும்’ என்ற திட்டத்துடன் என்டர் ஆகும் கிருஷ்ணா, தொடக்க காட்சியிலேயே நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.
தனது திட்டத்தை வங்கி அதிகாரி சந்தானபாரதியிடம் காட்டி அமுல்படுத்துவதற்காக காத்திருக்கும்போது அந்த திட்டத்தை அப்படியே திருடி, தான் உருவாக்கிய திட்டம்போல் சந்தானபாரதி விளம்பரப்படுத்திக் கொண்டதும் துடிக்கிறார் கிருஷ்ணா. தன்னை ஏமாற்றிய சந்தானபாரதியை பழிவாங்க புறப்பட்டதும் சுறுசுறுப்பு, வேகம், இளமை, துடிப்பு என எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக சேர்த்துக்கொண்டு களம் இறங்குவது ஜோர்.
தனி அறையில் சந்தானபாரதியிடம் கால் கேர்ள் ஒருவரை அனுப்பி, அதை படம் எடுத்து கொண்டு அவரிடம் லட்சக் கணக்கில் பணம் அபேஸ் செய்ததும் காட்சிகள் றெக்கை கட்டிக்கொள்கிறது. குறைந்த விலைக்கு வாங்கிய கண்ணாடி கற்களை, விலை உயர்ந்த கற்கள் என்று சொல்லி நகைக் கடைக்காரரிடம் மோசடி செய்வதில் தொடங்கி புத்திசாலித்தனமான பல்வேறு மோசடிகளை அரங்கேற்றுகிறார் கிருஷ்ணா.
கண்ணாடி கற்களை விலை மதிப்பற்ற கல் என்று ஏமாற்றுவது ஓரளவுக்கு ஏற்க முடிந்தாலும், பிரபல சினிமா ஸ்டுடியோவை போலி பத்திரம் காட்டி விற்கிறார் என்பது ஓவர். காலில் செருப்பு கூட அணியாமல் கொளுத்தும் வெயிலில் ராமேஸ்வர தெருக்களில் ஓடுவது, பிடிப்பு சுவர் இல்லாத மாடிகளில் தாவுவது, உயரத்திலிருந்து சிமென்ட் ஓடுகளை உடைத்துக்கொண்டு விழுவது என மெனக்கெட்டிருக்கிறார் கிருஷ்ணா. பார்ப்பதற்கு பக்கத்துவீட்டு பெண்போல் இருந்தாலும் மாடர்ன் காஸ்ட்டியூமில் தகதகக்கிறார் விஜயலட்சுமி. சம்பத்திடமும், போலீஸ் அதிகாரி கல்யாணிடமும் சிக்கிக்கொள்ளாமலிருக்க கிருஷ்ணாவுடன் சேர்ந்து மூச்சிரைக்க ஓடும்போது அனுதாபம் அள்ளுகிறார். முமைத்கான் ஒரு பாடலுக்கு வந்துபோகிறார்.
தயாரிப்பாளராக வரும் கஞ்சா கருப்பு தன் படத்தில் தானே ஹீரோவாக நடிப்பதும், அடிக்கடி போலீஸ் அதிகாரி சாமிநாதனிடம் சிக்கிக்கொண்டு அடிவாங்குவதும் சிரிப்பு. நகைக்கடை அதிபராக வரும் சின்னி ஜெயந்த் ஜொள்ளுகிறார்.
பாடல் காட்சிகளை பளிச்சென பதிவு செய்திருக்கும் நீரவ்ஷாவின் கேமரா ஆக்ஷன் காட்சிகளில் சுழன்றிருக்கிறது. பால்ஜேவின் பாடல் இசையும் சபேஷ்&முரளியின் பின்னணியும் அருமை. ஆக்ஷன் அவதாரத்துக்கு டிரை பண்ணியிருக்கிறார் கிருஷ்ணா. ஆனால், அவர் பல பேரை போட்டு பின்னுவதை நம்பமுடியவில்லை. கிருஷ்ணாவை நம்பி வீட்டை விட்டு வெளியேறும் விஜயலட்சுமியை அவர்கள் பெற்றோர்கள் தேடவே மாட்டார்களா? என்பது போன்ற லாஜிக் மிஸ்ஸிங்குடன் படம் இயக்கியிருக்கும் இயக்குனர், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் பரபரப்பாகியிருக்கும் படம்.