
காவல்துறையால் பாதிக்கப்பட்ட ஒரு சமுகத்திற்கும், காவல்துறைக்கும் இடையே நடக்கும் மோதலில் பகடைக்காயாய் சிக்கும் ஒரு பெண். அந்த பெண்ணாலயே அந்த மோதல் எந்த நிலையில் போய் முடிகிறது என்பதுதான் ராவணனின் கதை சுருக்கம். ராமாயண காவியத்தையும், வீரப்பன் கதையையும் சேர்த்து ராவணனை உருவாக்கியிருக்கிறார் மணிரத்தினம்.
பழங்குடி மக்களுக்கு சகலமுமாக இருப்பவன் வீரா (விக்ரம்-ராவணன்), அண்ணன் சிங்கம்(பிரபு-கும்பகர்ணன்), தங்கை வெண்ணிலா (ப்ரியாமணி-சூர்ப்பணகை) என வாழந்து வரும் வீரா. தேவ் (பிருத்வி ராஜ்–ராமன்) தலைமையில் சிறப்பு அதிரடிப்படை ‘வீரா’-வை பிடிக்க வருகிறது. வீராவின் தங்கைக்கு திருமணம் நடக்கும்போது அதிரடிப் படை அந்த இடத்தில் நுழைந்து வீராவை போட்டுத் தள்ளப் பார்க்க, குண்டு காயத்துடன் அவர் தப்பிக்கிறார். உடனே அவன் தங்கை வெண்ணிலாவை தூக்கிப் போகும் அதிரடிப் படையினர், அவளை கற்பழிக்கிறார்கள். வீடு திரும்பும் அவள் வீராவிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.
தங்கை மரணத்தால் கோபம் அடையும் வீரா தேவ் மனைவி ராகினி-யை (ஐஸ்வர்யா ராய்–சீதா) கடத்திப் போகிறார், உடனே ராகினி-யை தேடி போலீஸ் அதிகாரி தேவ் பெரும் படையுடன் காட்டுக்குப் போகிறார். ஆரம்பத்தில் வீராவை வெறுக்கும் ராகினி, அவன் தங்கைக்கு நேர்ந்த சோகம், அதற்கு தன் கணவனும் ஒரு காரணம் என்பதை அறிந்து அமைதியாகிறாள். அவள் மீது வீராவுக்கு மோகம் பிறக்க, அதை அவளிடமே சொல்கிறான். அதை மறுக்காமல் அமைதி காக்கிறாள் ராகினி. ஒரு கட்டத்தில் வீராவின் தம்பியையும் போலீஸ் அதிகாரி கொல்கிறான். இதைத் தொடர்ந்து வரும் சண்டையில் வீராவும் போலீஸும் கடுமையாக மோதுகிறார்கள். கடைசியில், ராகினிக்காக அவரது கணவரான போலீஸ் அதிகாரி தேவை கொல்லாமல் விடுகிறான் வீரா. ராகினியையும் விடுவித்து அனுப்பிவிடுகிறான்.
கணவனோடு ரயிலில் ஊர் திரும்பிக் கொண்டிருக்கும் ராகினியின் கற்பை சந்தேகப்படுகிறார் கணவர் தேவ். இதனால் கோபமடையும் ராகினி மீண்டும் வீராவிடமே திரும்புகிறாள் ராகினி… அதன் பிறகு நடப்பது தான் க்ளைமாக்ஸ்.
வீரா கதாபாத்திரத்தில் வரும் விக்ரம் தன்னுடைய அனுபவத்தால் கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார். தனது தங்கையின் மறைவின் போதும், ஐஸ் மீது காதலட கொள்ளும் போதும் முகபவங்களில் நடிப்பில் மெய் சிலர்க்க வைக்கிறார் விக்ரம்.
கண்ணில் பயத்தையும், வீராவிடம் அவர் படும் தவிப்பும் அழகாக வெளிக்காட்டியிருக்கிறார் ஐஸ். கார்த்திக் மற்றும் பிரபுவின் அனுபவம் படத்தின் திரைக்கதைக்கு மிகவும் உதவியுள்ளது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு கரடு முரடான பாதைகளையும், அழகிய சோலை வனமாக காட்டியிருக்கும் விதம் அருமை. பிருத்வி மற்றும் ப்ரியாமணி தன்னுடைய பங்கிற்கு சரியாக நடித்துள்ளனர்.
தன்னுடைய கணவனின் கதைக்கு ஏற்ப வசன நீளத்தை குறைத்து எழுதியுள்ளார் சுஹாசினி மணிரத்னம், ரகுமானின் பின்னணி இசையும், பாடல்களும் கதையுடன் பயணம் செய்கிறது. குறிப்பாக காடுகளில் கதை செல்லும் போது அவரது இசை மிரட்டுகிறது. ராமாயண காவியத்தையும், வீரப்பன் கதையையும் சேர்த்து ராவணனை உருவாக்கியிருக்கும் மணி கஷ்டமான கதை களத்தை எடுத்து வெற்றி கண்டுள்ளார் மணிரத்னம்.