Monday, September 6th, 2010
Tamilwebspace.com

வெளுத்து கட்டு

Published on July 27, 2010 by பிரபலம்.கொம்   ·   No Comments


சிங்கம்பட்டியைச் சேர்ந்த கதிரும், அருந்ததியும் பள்ளி பருவத்திலிருந்தே காதலிக்கிறார்கள். காலம், கதிரை தறுதலையாக வளர்க்கிறது. ஆனாலும் அருந்ததியை உயிருக்கு உயிராக காதலிக்கிறார். அருந்ததியும் உடல், பொருள், ஆவி அனைத்தும் கதிருக்குத்தான் என்று வாழ்கிறார். கல்யாண வயதை எட்டியதும், ‘ஒரு வேளை கஞ்சி ஊத்த வக்கில்லாதவனையா கல்யாணம் பண்ணிக்கப்போற?’ என்று குடும்பம் கேட்க, வெகுண்டு எழுகிறார் அருந்ததி. ‘எனக்கு புருஷனாக இந்த தகுதி போதும். ஆனா எங்க குடும்பத்துக்கு மருமகனாக உன் தகுதியை வளர்த்துக்கணும், எங்கயாவது போயி பெரிய மனுஷனா திரும்பி வா. அது வரைக்கும் உனக்காக காத்திருப்பேன்’ என்று சொல்லி கதிரை அனுப்பி வைக்கிறாள் அருந்ததி. சென்னை வரும் கதிர் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி பெரும் பணம் சம்பாதிக்கிறார். அருந்ததி ஆசைப்பட்ட மாதிரி மாறி ஊருக்கு செல்கிறார். ஆனால் அங்கு அருந்ததியின் நிலைமை வேறாக இருக்கிறது. அருந்ததி, கதிர் சேர்ந்தார்களா? என்பது கிளைமாக்ஸ். வழக்கமாக சட்டம், போலீஸ், நீதிபதி, வக்கீல் என்ற வட்டத்துக்குள் ஆக்ஷன் படம் தரும் எஸ்.ஏ.சந்திரசேகரன், புதியவர்களை வைத்து மண்சார்ந்த யதார்த்த படம் ஒன்றை தந்ததிருக்கிறார்.

புதுமுகம் கதிரும், அருந்ததியும் சரியான தேர்வு. பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ஆனாலும் இருவருமே ‘பருத்தி வீரன்’ சாயலை தவிர்த்திருக்கலாம். காதலி, விளையாட்டாக சொன்னதற்காக உயரமான அருவியில் இருந்து குதிப்பதும் அவரைக் காணாமல் அருந்ததி பதட்டத்துடன் தேடுவதும் அவன் வந்ததும் அவனை அடித்து, ‘என்னடா இப்படி பண்ணிட்ட’ என்று கதறுவதுமான அழகான கிராமத்து காதல் அற்புதம். தன்னை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையிடம், ‘இதபாரு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் உங்கூட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் என் கதிர்கூட இருக்கிறதா நினைச்சுக்குவேன். பரவாயில்லையா?’ என்று கேட்கும்போதும், ‘இது கதிரோட உடம்புடா. இதையா தொட்ட’ என்று சொல்லி வில்லனை துவம்சம் செய்யும்போதும் கிராமத்து கோபம் அருந்ததிக்கு கைவருகிறது.

கதிரின் நண்பர் பட்டாளம் வழக்கமான காமெடி பார்ட்டிகள். சென்னைக்கு வரும் கதிர் ஒரே பாட்டில் பணக்காரனாகாமல் படிப்படியாக அவர் முன்னுக்கு வரும் திரைக்கதையில் புதுமுக இயக்குனர் சேனாபதிமகன் திறமை பளிச்சிடுகிறது. சண்டை காட்சிகளுக்கு நிறைய சந்தர்ப்பம் இருந்தும் தேவையான இடத்தில் கச்சிதமாக பயன்படுத்தியிருப்பதும், பாடல் காட்சிகளை கிராமிய மணத்தோடு காட்சிப்படுத்தியிருப்பதும் கச்சிதம். பரணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மெலடியில் சொக்க வைத்திருக்கிறார்.  ஷோபாவின், ‘அசிலி பிசிலி…’யும், ‘வெளுத்துக்கட்டு…’ பாட்டும் அதிரடி ஆட்டம் போட வைக்கும் வகை. சுகுமாரின் ஒளிப்பதிவு மிகையின்றி இதமாக இருக்கிறது.

காதலி சொன்ன வார்த்தைக்காக காதலன் சென்னை வந்து முன்னுக்கு வருவது ஓகே. ஆனால். அவள் சொன்னாள் என்பதற்காக கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணுவது, அசல் கோடம்பாக்கத்து சரக்கு. ஆறேழு வயதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் பாலின ஈர்ப்பை காதல், கல்யாண ஆசை என்கிற ரீதியில் சித்தரிப்பதில் லாஜிக் இல்லை. ஆனாலும் ஒரு கிராமத்து காதலையும் அதன் ஈரம் மற்றும் வீரத்தை காட்சிபடுத்தியிருப்பதிலும் வெளுத்து கட்டியிருக்கிறார்கள்.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

முக்கியமாக பார்வையிடப்பட்டவை

Our Sponsors

Pirapalam Fm