தற்போது பரபரப்பாக வெளியாகிக் கொண்டிருக்கும் எந்திரன் இசை வெளியீட்டு விழாவுடன் இணைத்து பரபரப்பாகப் பேசப்படுவது ‘இனிது இனிது’ படத்தின் இசை வெளியீட்டு விழாவும்தான். எந்திரனைப் போல பிரமாண்ட விழா, இப்படத்திற்கு இல்லையென்றாலும் ஒரு விசயத்தில் எந்திரன் விழாவிற்கும், இனிது இனிது விழாவிற்கும் ஒற்றுமை இருக்கிறது.
பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தை, ஒளிப்பதிவாளர் குகன் இயக்குகிறார். இப்படத்தின் இசையை வித்தியாசமான முறையில் வெளியிட நினைத்த பிரகாஷ்ராஜ், பத்திரிகையாளர்களை அழைத்து அந்த செய்தியை கூறினார்.
அதை மட்டும் கூறியிருந்தால் பரவாயில்லை, பிரகாஷ்ராஜ் பேசுகையில், “தமிழ்நாட்டில் படத்தை எடுத்துவிட்டு, பாடல் வெளியீட்டு விழாவை வெளிநாட்டில் நடத்துவதெல்லாம் அவசியம் இல்லாதது என்று நினைக்கிறேன்” என்று கூறி தான் தனது பேச்சை ஆரம்பித்தார்.
பிறகு என்ன, இப்போது எந்திரன் படத்திற்கும் பிரகாஷ்ரஜுக்கும் சம்மந்தமில்லை என்றாலும், எந்திரன் செய்தியோடு பிரகஷ்ராஜின் பெயரும் அடிபடுகிறது. சரி, நாம் சொல்ல வந்த விஷயத்தை சொல்லிவிடுவோம். ‘இனிது இனிது’ படம் கல்லூரி மாணவர்களுக்கிடையே உள்ள நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால், இப்படத்தின் பாடல்களை பொதுமக்களின் முன்னிலையிலும், கல்லூரி மாணவர்களின் முன்னிலையிலும் வெளியிடப்போகிறார்கள்.
நண்பர்களின் தினமான ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று சென்னை சிட்டி சென்டர், அம்பா ஸ்கைவாக் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, கோவை போன்ற ஊர்களுக்கு சென்று, அங்குள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களின் முன்னிலையில் இப்படத்தின் பாடல்களை வெளியிடப்போகிறார்கள்.
இதற்காக ஆகஸ்ட் 1ஆம் தேதி, இரவே பிரகாஷ்ராஜ், உட்பட படக்குழுவினர் அனைவரும் சிறப்பு பேருந்தில் புறப்பட்டு விட்டார்கள். இப்படி சூடு கிளப்பிய ‘இனிது இனிது’ நிகழ்ச்சியில் மற்றொரு சூடான செய்தியும் இருக்கிறது. பிரகாஷ்ராஜின் வருங்கால மனைவி போனி வர்மாவும் வந்திருந்தார்.
பத்திரிகையாளர்கள் கேட்பதற்கு முன்பே இவங்க என்னோட சினேகிதி என்று போனி வர்மாவை அறிமுகப்படுத்திய பிரகாஷ்ராஜ், மற்ற விஷயங்களை பிறகு பேசுவோம். இப்போதைக்கு படத்தை பற்றிமட்டும் பேசுவோம் என்றார்.