
ஒரு குப்பத்து இளைஞன், பேஷன் டெக்னாலஜி படிக்கும் ஹைகிளாஸ் பெண்ணை காதலிக்கிறார் என்பதுதான் கதை.
விதவை தாயின் மகனான அதர்வா, அவருக்கு படிப்பை விட நல்லா பட்டம் விட வரும் என்பதுதான் பாணா காத்தாடி என்ற படத்தலைப்பின் விளக்கம். ஒரு நாள் நூல் அறுந்து காற்றில் பறந்து போகும் பட்டத்தை பிடிக்க தலை தெரிக்க ஒடும் போது, எக்கு தப்பாக சமந்தாவை இடித்து தள்ளிவிட்டு ஒடும் போது சமந்தாவின் கையடக்க தகவல் தாங்கியை (பென் டிரைவரை) எடுத்துச் சென்று விடுகிறார். இதை தேடி அதர்வா வீட்டுக்கு போய் அவரிடம் கேட்க அது என்னிடம் இல்லை என்று சொல்லி விடுகிறார் அதர்வா.
அந்த பெண் டிரைவில் தனது படிப்புக்காக இருக்கும் புராஜெக்ட் மிஸ் ஆவதால் கோபத்தில் அதர்வாவை அரைந்து விடுகிறார் சமந்தா. இதற்கு பழிவாங்க அதர்வா நினைக்கும் நேரத்தில் அவரது பாக்கெட்டில் தவறுதலாக அந்த பென்டிரைவர் இருப்பதை பார்த்து, தனது தவறை உணர்ந்து, அதை சம்ந்தாவிடம் ஒப்படைக்கிறார். இதனால் சந்தோஷப்படும் சமந்தாவுக்கு, அதர்வா உடன் நட்பு மலருகிறது.
இந்த நட்பை காதல் என புரிய வைக்கின்றனர் அதர்வாவின் நண்பர்கள். சரி, என்று சமந்தாவிடம் தன் காதலை சொல்ல போகும் சமயத்தில் சந்தர்பப் சூழ்நிலையால் நடக்கும் தவறால், அதர்வாவை வெறுக்கிறார் சமந்தா. இதனால் ஏற்படும் விரக்தியில், சமந்தாவை சந்திப்பதை தவிர்க்கிறார் அதர்வா. இதற்கு இடையில் அதர்வா குப்பத்தில் நடக்கும் ஒரு எம்.எல்.ஏவின் கொலையை பார்த்துவிடுவதால் அவரை கொல்ல ஒரு கும்பல் திட்டம் போடுகிறது.
அதன் பிறகு, தோழியின் விளக்கத்தால் அதர்வா மேல் தவறு இல்லை என்று புரிந்து கொள்ளும் சமந்தா, அதர்வாவை தேடிவருகிறார். ஆனால், அவரையும், அவருடைய காதலையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் அதர்வா. ஆனால், சமந்தாவின் முயற்சி விடா முயற்சியாக இருக்க, அவருடைய முயற்சி வெற்றி பெற்றதா? அதர்வாவை கொல்ல துடிக்கும் கும்பலிடமிருந்து அதர்வா என்ன ஆனார்? என்பது மீதி கதை.
நடிகர் முரளியின் மகன் அதர்வா கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம். கன்டிப்பாக அதர்வாவின் அப்பா முரளி என்று சொல்ல வைக்கும் திறமை அருக்குள் இருப்பதை தன் நடிப்பால் நிருபித்திருக்கிறார். எதற்கும் கவலைப்படாத இளைஞனாக வலம் வருவது, காதலிக்கு கிப்ட் எப்படி வாங்குவது என யோசிப்பது, தன் தவறை நினைத்து அழுவது, இத்துடன் தன்னுடைய ப்ளஸ்ஸான ஸ்மைலிங் பேஸையும் சிறப்பாக காட்டியிருக்கிறார். ரொம்ப நல்லாவே டான்ஸ்ம் ஆடுகிறார். நம்ம விரும்புறது கிடைக்காத போது, அதை விட பெட்டராக வேற ஒன்னும் கிடைக்கும் என காதலியிடம் கூறும் போது பளிச்சிடுகிறார்.
பிரசன்னா தான் ஒரு தவறான இளைஞனாக இருந்தாலும், தனது பாதையையும், தன்னையும் ஹீரோயிஸமாக எடுத்துக்கொண்டு அந்த குப்பத்து இளைஞர்கள் பின்பற்றி விடக்கூடாது என்பதை அழுத்தமாக சொல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது கவுரதி கிடையாதுடா, கலீஜ்டா என்று தனது ரவுடித்தனத்தை தானே காறி துப்பிக்கொள்ளும் போது, பிரசன்னா ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நல்லாதான் நடித்திருக்கிறார் என மனதில் தோன்ற வைக்கிறார்.
கதாநாயகி கமர்சியலுக்காக வந்து போவாங்க என்கிற கான்செப்ட் இல்லாமல், சமந்தா காட்சிகளில் நிறைவான நடிப்பையும், பாடல்களில் கவர்ச்சியையும் காட்டி தனது கதாபாத்திரத்தை நிறைவு செய்திருக்கிறார்.
மெளனிகா குப்பத்து தாயாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நல்லவங்களுக்குதான் அழுகைவரும் என்று சொல்லி மகனை திட்டும் போதும், தேற்றும் போதும் மனதில் பதிகிறார்.
டி.பி.கஜேந்திரன் சட்டை பையில் வைக்கும் பணத்தை, கருணாஸ் எடுக்க நினைக்க, அது அவர் கைக்கு கிடைக்காமல் இருப்பதும். அதற்கு இறுதியா டி.பி.கே கொடுக்கும் தீர்வும் சிரிக்க வைக்கிறது. திருடன் கையில் இருந்தால் பணம் பத்திரம்ங்ற கான்செப்ட்தான், அந்த காமெடி.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் தாக்குதே கண் தாக்குதே பாடல் மனதில் பதியும் ரகம். அவருடைய பின்னணி இசை யாரு யுவன்தானே எனக் கேட்க வைத்திருக்கிறார். அதுவும் அந்த குஜராத் அறிமுகத்துக்கு அவர் கொடுக்கும் பின்னணி இசையில் மனம் துள்ளுகிறது.
அங்காடித் தெருவின் அழகை, அழகாக பதிவு செய்து பாராட்டும், புகழும் பெற்ற ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு, இந்த படத்திலும் ரசிக்கும் படியாக நிறைவாக இருக்கிறது. காட்சியின் எதார்த்தத்தை பிரமாண்டமாக பதிவு செயது தனது ஒளிப்பதிவு திறனை மீண்டும் நிருபித்திருக்கிறார்.
லஷ்மிகாந்தனின் கதையை, திரைக்கதை ஆக்கும் முயற்சியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ். முதல் பாதியில் நாம் ஒன்று நினைத்தால் நடப்பது வேறு என்பதுபோல எதிர்பாரத சம்பவங்களை சொன்னவர், இரண்டாம் பாதியில் எதிர்பார்க்கும் சம்பவங்களை தந்தது சுவராஸ்யத்தை கொடுஙக்க தவறி இருக்கிறார். காதல் என்பது கமர்சியல்தான் என்பதை தனது எதார்த்தமான காட்சிகளால், வசனங்களால் மனதிலும் நிற்கும் இயக்குநர் இன்னும் மயற்சி இருந்தால் பெரும் வெற்றியை பெற்றிருக்கலாம்.
- எஸ்.செல்வநாதன்.
